புதுச்சேரி:
முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு ஜூன் 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு உள்ளது. வரும் 8ந்தேதி முதல் கோவில்கள் திறக்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி இன்று முதல்வர் அலுவலகத்துக்கு வந்த ஊழியர் ஒருவருக்கு சோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அனைத்து ஊழியர்களும் வெளியேற்றப்பட்டு, முதல்வர் அலுவலகம் உள்பட  சட்டப்பேரவை வளாகம்  முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.