புதுச்சேரி

தொடர்ந்து மூன்றாம் நாளாகப் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் உள்ளிட்ட காங்கிரஸார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் தொடர்ந்து ஆளுநர் மற்றும் முதல்வருக்கிடையே கடும் போராட்டம் நிலவி வருகிறது.  புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி அறிவிக்கும் பல திட்டங்களுக்கு ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் அளிப்பதில்லை.   இதனால் மக்கள் நலத்திட்டங்கள் மிகவும் பாதிப்பு அடைந்து வருவதாகக் காங்கிரஸ் கட்சியினர் குறை கூறி வருகின்றனர்.   ஆயினும் கிரண் பேடி தனது போக்கை மாற்றிக் கொள்ளாமல் இருந்து வருகிறார்.

நேற்று முன் தினம் காலையில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும், மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாகவும் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து செயல்பட்டு வருவதாகக் கூறி முதல்வர், காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் அண்ணாசிலை அருகே தர்ணாப் போராட்டத்தைத் தொடங்கினர். இந்த போராட்டம் 2-வது நாளாக நேற்று இரவிலும் நீடித்தது.

நேற்று கொட்டும் மழையிலும் இந்த சாலை போராட்டம் தொடர்ந்தது.  மழை பெய்த போதும் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் சாலையில் படுத்து உறங்கினர்.  காங்கிரஸ் நடத்தும் போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

இன்றும் 3ம் நாளாக காங்கிரசாரின் போராட்டம் தொடர்கிறது. இதையொட்டி சுமார் 300க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் போராட்டக்களத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.  போராட்டம் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.  இதனால் புதுச்சேரியில் கடும் பதட்டம் நிலவுகிறது.