புதுச்சேரியில் இன்று அரசு விடுமுறை  

ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக இன்று   பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முகரம் விடுமுறையை ஈடுசெய்ய இன்று வேலைநாளாக புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது.  இந்நிலையில், கனமழை ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக அந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

மேலும், கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள அக்டோபர் 7ம் தேதி அரசு அதிகாரிகள் விடுமுறை எடுக்கக் கூடாது என்றும்  அவர் உத்தரவிட்டுள்ளார்.

தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் புயலாகவும் மாறி வடமேற்கு திசையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன் தெற்கு வங்கக்கடலில் 8ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் 8ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என்றும்  சில இடங்களில் கன முதல் மிகக்கனமழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.