புதுச்சேரியில் பரபரப்பு: தமிழில் மொழி பெயர்க்க நாராயணசாமியை அழைத்த கிரண்பேடி

--

புதுச்சேரி:

புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் ஆளுநர் கிரண்பேடி கலந்துகொண்டனர். அப்போது, ஆளுநர்  கிரண்பேடி, தனது ஆங்கில பேச்சை தமிழில் மொழிபெயர்க்க புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை அழைத்தார். இதன் காரணமாக பரபரப்பு  ஏற்பட்டது.

புதுச்சேரி கம்பன் கழகத்தின்  53வது கம்பன் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்ள ஆளுநருக்கும், முதல்வ ருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. விழாவில்  ஆளுநர் கிரண்பேடியும், முதல்வர் நாராயணசாமியும்  கலந்துகொண்டனர்.

சமீப காலமாக ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையே முட்டல் மோதல் தொடர்ந்து வந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு ஆளுநர் கிரண்பேடி, மாநில வளர்ச்சிக்காக இணைந்து செயல்படுவோம் என்று முதல்வருக்கு அழைத்து விடுத்திருந்தார்.

இந்நிலையில், கம்பன் விழாவில் ஆளுநரும், முதல்வரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய கிரண்பேடி, தனது ஆங்கில பேச்சை முதல்வர் நாராயணசாமியை மொழி பெயர்த்து சொல்லும்படி அழைப்பு விடுத்தார்.

அதை ஏற்றுக்கொண்ட முதல்வர்  நாராயணசாமி எந்தவித  தயக்கமும் இன்றி கிரண்பேடிக்கு அருகில் சென்று அவர் பேசுவதை மொழி பெயர்த்தார். இதை கண்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் வியப்படைந்தனர்.

அதைத்தொடர்ந்து பேசிய கிரண்பேடி,  தனது பேச்சை முதன்முதலாக மொழிபெயர்த்த நாராயணசாமிக்கு நன்றி தெரிவிப்பதாக அதே மேடையில் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து கம்ப ராமாயணப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதலமைச்சர் மற்றும் ஆளுநர் சார்பில் தலா ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது.

எலியும் பூனையுமாக இருந்த ஆளுநரும், முதல்வரும் இன்றைய நிகழ்ச்சியில் இணைந்து செயல்பட்டது நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடையே ஆச்சரியத்தை  ஏற்படுத்தியது.