1naran
புதுச்சேரி:
முதல்வர் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக எம்எல்ஏ ஜான்குமார் தெரிவித்து உள்ளார்.
புதுச்சேரியின் தற்போதைய முதல்வராக நாராயணசாமி பதவி வகித்து வருகிறார். இவர் தேர்தலில் போட்டியிடாமல் முதல்வராக தேர்ந்து எடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் 6 மாதத்திற்குள் தேர்தலில் நின்று வெற்றி பெற வேண்டும் என்பது அரசியல் சட்டம். இதன்படி நாராயணசாமி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
மேமாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 30 இடங்களில் 15 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது.  அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.க. இரண்டு இடங்களை மட்டுமே கைப்பற்றியது. அப்போது ஆளும் கட்சியாக இருந்த முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ், வெறும் 8 இடங்களில் மட்டுமே வென்றது.
இதன் காரணமாக காங்கிரஸ் ஆட்சி அமைக்க முன்வந்தது. இதையடுத்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாத  நாராயணசாமியை  அகில இந்திய காங்கிரஸ் கட்சி  முதல்வர் பொறுப்புக்கு தேர்வு செய்தது. பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு நாராயணசாமி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அவருடன் ஐந்து அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
தற்போது தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள முதல்வர் நாராயணசாமிக்கு நெல்லித்தோப்பு  தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஜான்குமார் தனது தொகுதியை விட்டுகொடுக்க முன் வந்துள்ளதாக தெரிகிறது.
இதற்காக அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை செய்ய முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து ஜான்குமார் கூறும்போது,  நாராயணசாமி எனது தந்தை போன்றவர். அவருக்காக எனது தொகுதியை விட்டுக்கொடுப்பதில் தவறு இல்லை. 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சோனியா, ராகுல் காந்தி மனதில் நீங்கா இடம்பெறுவேன். வரும்  14 அல்லது 15 தேதிகளில் எனது ராஜினாமாவை எதிர்பார்க்கலாம்  என்று அறிவித்து உள்ளார்.