புதுச்சேரி:

கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக புதுவை முதல்வர் நாராயணசாமி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானியில் தர்ணா  போராட்டம் நடத்தி வருகிறார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக கவர்னர் கிரண்பேடி செயல்பட்டு வருவதை கண்டித்து புதுச்சேரிமுதல்வர் நாராயணசாமி நேற்று முதல் கவர்னர் மாளிகை முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

இதையடுத்து,  மாநில நலன் குறித்து இருவரும் கலந்து பேசலாம் என்றும், போராட்டத்தை கைவிடுமாறும்  கவர்னர் கிரண்பேடி நேற்று மாலை  முதல்வர் நாராயணசாமிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இதற்கு முதல்வர் நாராயணசாமி, காட்டமாக பதில் கடிதம் எழுதி உள்ளார். நேற்று இரவே நாராயணசாமி எழுதியுள்ள பதில் கடிதத்தில், மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருவதை எதிர்த்து, மக்கள் போராட்டமாக இந்த தர்ணா போராட்டம் நடைபெற்று வருவதாகவும்,  உங்களின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிரானது என்றும், மக்கள் விரோத போக்கை எதிர்த்தும், தான் இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

முதல்வரின் தர்ணா போராட்டம் காரணமாக, கவர்னர் மாளிகை பாதுகாப்புக்காக, 5 பட்டாலியன்  துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

மாநில அரசின் நிர்வாகத்தில் தொடர்ந்து தலை யிட்டு வரும் கிரண்பேடிக்கு எதிராக மாநில முதல் வரும் அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில்,  சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட  கட்டாய ஹெல்மெட் திட்டத்தில்  மாநில அரசுக்கும் கவர்னருக்கும் இடையே மோதல் தீவிரமடைந்தது.

கவர்னர் உத்தரவுகளை  அமல்படுத்திய மாநில டிஜிபி சுந்தரி நந்தா  ஹெல்போடாத இரு சக்கர வாகன ஓட்டிகளை மடக்கி அபராதம் வசூலித்து  பரபரப்பை ஏற்படுத்தினார். இது மாநிலத்தில் சலசலப்பை ஏற்டுத்தியது.

இதனால் அதிருப்தி அடைந்த முதல்வர் நாராயண சாமி  நேற்று அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு தனது அமைச்சரவை சகாக்கள் மற்றும் எம்எல் ஏக்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

அதையடுத்து,  நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன்,  எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், ஜெயமூர்த்தி, பாலன், தீப்பாய்ந்தான், விஜயவேணி, தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா ஆகியோர் கவர்னர் மாளிகையை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

ஆனால் அவர்களை கவர்னர் மாளிகை அருகே விடாமல் காவல்துறையினர் தடுப்பு ஏற்படுத்தி தடுத்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை கவர்னர் மாளிகை வாசல் வரை அனுமதித்தனர். அங்கு முதல்-மந்திரி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கவர்னர் மாளிகை அருகே பரபரப்பான சூழ்நிலையும், பதட்டமும் ஏற்பட்டது.

தர்ணா போராட்டம் குறித்து பேசிய முதல்வர் நாராயணசாமி,  கவர்னர் கிரண்பேடி இங்கு பதவி ஏற்றதில் இருந்தே அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வந்தார். எந்த பணியையும் செய்ய முடியவில்லை. கவர்னரால் புதுவை மாநிலமே ஒட்டுமொத்தமாக முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மக்கள் கடுமையாக பாதிக்கப் படுகிறார்கள். எனவே, வேறு வழி தெரியாமல் நாங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

நாராயணசாமியின் போராட்டத்துக்கு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேற்று இரவு சபாநாயகர் வைத்திலிங்கம் நேரில் சென்று நாராயண சாமிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலத்தில் சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கைக்கு எதிராக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி களமிறங்கியதை போல, புதுச்சேரி கவர்னருக்கு எதிராக  முதல்வர் நாராயணசாமி களமிறங்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.