புதுச்சேரி:

மைச்சர்கள் மீது ஊழல் புகார் கூறிய புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக மாநில காங்கிரஸ் தலைமை அறிவித்து உள்ளது.

புதுச்சேரி மாநிலம் பாகூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் தனவேலு. காங்கிரஸ் எம்எல்ஏவான இவர், நாராயணசாமி அரசு மீது அதிருப்தியில், அவ்வப்போது பல்வேறு புகார்களை கூறி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது தொகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து மாத்திரைகள் இல்லை எனக்கூறி பொதுமக்களுடன் சேர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்.   அப்போது பேசியவர், முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் ஊழல் செய்வதாகவும், மிக மோசமான ஆட்சி நடக்கிறது என்றும் தனவேலு எம்.எல்.ஏ. விமர்சித்திருந்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாநில ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து, தனது கட்சி ஆட்சியாளர்கள்மீது ஊழல் புகார் கூறினார்.

இந்த சம்பவங்கள் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எம்எல்ஏ தனவேலு மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, முதல்வர் நாராயணசாமி,  மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் ஆகியோர் கட்சி தலைமையிடம் புகார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஒப்புதலுடன் எம்எல்ஏ தனவேலு சஸ்பெண்டு செய்யப்படுவதாக மாநில தலைவர் நமச்சிவாயம் அறிவித்து உள்ளார்.