புதுச்சேரி:

ளுநர் கிரண்பேடியின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.  மாநில ஆளுநராக பாஜகவை சேர்ந்த கிரண்பேடி உள்ளார். இவர்  மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாக ஆளும் கட்சிக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

ஏற்கனவே, பாஜகவை சேர்ந்த 3 பேரை  நியமன சட்டமன்ற உறுப்பினராக தன்னிச்சையாக பதவி ஏற்க வைத்த கவர்னர், மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

தன்னிச்சையாக ஆய்வுக்கு செல்வதாக கூறி, மாநில அரசு மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதற்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, திடீரென தூய்மையான கிராமம் என்ற சான்றிதழ் பெற்றால்தான் இலவச அரிசி வழங்கப்படும் என அறிவித்தார்.

இதற்கு புதுச்சேரி மாநில அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து தனது அறிவிப்பை வாபஸ் பெற்றார்.

இந்நிலையில், ஆளுநரின் அதிகார வரம்புமீறிய செயலுக்கு  திமுக, காங்கிரஸ்  மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், இன்று முத்திரையர்பாளையத்தில் ஆய்வு செய்வதற்காக  கிரண்பேடி சென்றார். இதை அறிந்த அந்த பகுதி காங்கிரஸ் தொண்டர்கள், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலையை மறித்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.