புதுச்சேரி:

புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களின் வலையில் சிக்கிய உருளை, பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பாகம் என்பது தெரிய வந்துள்ளது. புது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஏராளமானோர் அந்த உருளையை பார்த்துச் செல்கின்றனர்.

புதுச்சேரி அருகேஉள்ள வம்பாகீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வழக்கம்போல தங்களது ஃபைபர் படகு மூலம் மீன்பிடிக்கச் சென்றனர்.  அப்போது அவர்களது வலையில் 30 அடி நீளமுள்ள உருளை போன்ற ஒரு பொருள் சிக்கியது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து, அந்த உருளையை 4 படகுகள் மூலம் மீனவர்கள் கரைக்கு இழுத்து வந்தனர். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், அந்த உருளை குறித்து ஆய்வு செய்து உயர்அதிகாரிகளுக்கு  தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த உருளையை சோதனை செய்தனர்.

அப்போது, அந்த உருளை, ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள்களை நிரப்பிச் செல்லும் ராக்கெட்டின் பாகம் என்பது தெரிய வந்தது. விண்வெளிக்கு செலுத்தப்பட்டும் எராக்கெட்டைச் சுற்றி வைக்கப்படும்  5 எரிபொருள் நிரப்பிய உருளைகள் இது என்றும், இதனுள் உள்ள எரிபொருள் முடிந்தவுடன் இந்த உருளைகளை ராக்கெட்டில் இருந்து பிரிந்து கடலில் விழுந்து விடும் என்றும், அந்த உருளைதான் தற்போது வலையில் சிக்கி இருப்பதாக கூறினர்.

இதுகுறித்து இஸ்ரோ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த இஸ்ரோ அதிகாரிகள், அது  பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பாகம்  என  தெரிவித்தனர். மேலும், அந்த ராக்கெட்டில் இருக்கும் சுமார் 1 அடி நீளமுள்ள பாகத்தைக் காணவில்லை என்றும், அது வெப்பத்தினால் வெடிக்கும் தன்மை கொண்டது, அதை யாராவத எடுத்திருந்தால் உடனே ஒப்புடையுங்கள் என்று கூறினார்.

இதற்கிடையே அந்த எரிகலனை இஸ்ரோ அதிகாரிகள் எடுத்துச் செல்ல முயன்றபோது, அங்குள்ள மீனவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த உருளையை கரைக்கு இழுத்து வரும் முயற்சியில் எங்கள் வலைகள் வீணாகிவிட்டன. அதற்கு உரிய இழப்பீடு கொடுத்தால் மட்டுமே அதை எடுத்துச்செல்ல அனுமதிப்போம் என்று கூறினார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டள்ளது. மீனவர்களுக்கு ஆதரவாக  உப்பளம் தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகனும்  போராட்டத்தில் ஈடுபட்டதால், காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.