புதுச்சேரி:

புதுச்சேரியில் முதல்வர் கவர்னருக்கிடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

டில்லி, புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடைபெற்று ஆட்சி அமைந்தாலும், அங்குள்ள கவர்னரின் அதிகாரமே கொடிகட்டி பறக்கிறது.

பெரும்பாலான யூனியன் பிரதேசங்களில் கவர்னரும், முதல்வரும்  எலியும் பூனையுமாகவே இருந்து வருகிறார்கள். இதன் காரணமாக மாநில வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு அதிகாரிகளும் இவர்களுக்கிடையே அல்லல்பட்டு வருகிறார்கள்.

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசு பதவி வகித்து வருகிறது. முதல்வராக நாராயணசாமி இருக்கிறார். ஆனால், கவர்னராக பாரதியஜனதாவை சேர்ந்த கிரண்பேடி இருக்கிறார்.

இதன் காரணமாக இருவருக்குமிடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிக்கடி மோதல் ஏற்படுவதும் பின்னர் சமாதானமாவதுமாக இருந்து வந்தது.

தற்போது இருவருக்கிடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அரசின்  அன்றாட அலுவல்களில் தலையிட்டு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து வருகிறார். வளர்ச்சி பணிகளையும் ஆய்வு செய்து விமர்சித்து வருகிறார்.

இது முதல்வர் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்களிடையே கவர்னர்மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதன் தொடர்ச்சியாக முதல்வர் நாராயணசாமி கவர்னருககு சட்டமன்றத்திலே கடும் எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால், கிரண்பேடி அதை கண்டுகொள்ளாமல், அரசுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார்.

தற்போது மோதலின் உச்சக்கட்டமாக முதல்வரின் நிதி ஆதாரத்தில் கை வைத்துள்ளார் கிரண்பேடி.

புதுச்சேரியில் ரூ.50 கோடி வரையான  திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. அதற்கு மேல் என்றால் மத்திய உள்துறையின் அனுமதியை பெற வேண்டும்.

முதல்வருக்கு  ரூ.10 கோடி வரையிலும், துறைகளின் செயலாளர்களுக்கு ரூ.2 கோடி வரையிலும் நிதி ஒதுக்கீடு செய்ய அதிகாரம் உள்ளது.

ஆனால், கவர்னர் பேடி, முதல்வரின்  நிதி அதிகாரத்தை ரத்து செய்துவிட்டு, நிதி அதிகாரம் இல்லாமல் இருந்த தலைமைச் செயலாளருக்கு ரூ.5 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தை கவர்னர் வழங்கி உள்ளார்.

அதேபோல்,  அரசு துறைகளின் செயலாளர்களுக்கான ரூ.2 கோடி வரையிலான நிதி ஒதுக்கீடு அதிகாரத்தையும் கவர்னர் ரத்து செய்துள்ளார்.

முதல்வரின் அதிகாரத்தை கவர்னர் ரத்து செய்து மோதலின் உச்சக்கட்டமாகும்.

இது சரியான அணுகுமுறை இல்லை என்பதால் கவர்னரின் இந்த உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால், மத்திய அரசோ, கவர்னரின் அத்துமீறிய செயலுக்கு இதுவரை எந்தவித பதிலும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது.

இதன்காரணமாக பழைய நடைமுறையே தொடர்ந்து வருகிறது.

இருந்தாலும், கவர்னர் அத்துமீறி செயல்பட்டு  இதுபோன்ற உத்தரவு பிறப்பித்துள்ளதுக்கு மத்தியஅரசு அனுமதி கொடுத்தால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செல்லாகாசாகி விடும்.

முதல்வர் மற்றும் அமைச்சர்களால்  எந்தவொரு மக்கள் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்க முடியாத சூழல் ஏற்பட்டு விடும். இது மக்களாட்சிக்கு விடுக்கப்பட்ட சவால்.

இதன் காரணமாக புதுச்சேரியில் அரசுக்கும் கவர்னருக்கும் இடையே உள்ள மோதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.