கிரண்பேடி

புதுச்சேரி:

ச்சநீதி மன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.

காவிரி நிதி நீர் விவகாரத்தில், உச்சநீதி மன்ற உத்தரவுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, புதுச்சேரி அரசு சார்பில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்து, அதற்கான கோப்புகள் கவர்னர் கிரண்பேடியின் அனுமதிக்காக அனுப்பப்பட்டது.

ஆனால், இந்த கோப்பில் கையெழுத்திட ஆளுநர் கிரண்பேடி மறுத்து விட்டார். இதை கண்டித்து, அதிமுக எம்எல்ஏக்கள் இன்று காலை புதுவை கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். மேலும் பொதுமக்களும் புதுவை கவர்னரின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்நிலையில், கவர்னர் கிரண்பேடி, பிரதமர் மோடிக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், உச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மத்திய நீர்வளத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரம் கருதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் அவர் அந்த கடிதத்தில் எழுதி உள்ளார்.