புதுச்சேரி, காரைக்கால் தோகுதி திமுக வேட்பாளர் நேர்காணல் இன்று மாலை நடைபெறும்! துரைமுருகன்

சென்னை: திமுக சார்பில் புதுச்சேரி, காரைக்கால் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்தவர்களுக்கான, வேட்பாளர் நேர்காணல் தேதி மாற்றம்செய்யப்பட்டு, இன்று மாலை நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.

தமிழகம், புதுவையில்  சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தொகுதி பங்கீடு, போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் நேர்காணல் என தேர்தல் பணி தீவிரமடைந்து வருகிறது.

திமுகவில், தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது. மற்றொரு பக்கம் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  புதுச்சேரி சட்டப்பேரவை பொது தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்பி விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் வரும் 6ம் தேதி மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அந்த  தேதி மாற்றம் செய்யப்பட்டு,  இன்று மாலை 4 மணியளவில் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.