புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்: ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி :

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதி மன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்து உள்ளார்.

புதுச்சேரி  சோம்பேட் பகுதியில்  இன்று காலை ஆய்வு மேற்கொண்ட துணைநிலை கவர்னர் கிரண்பேடி, செய்தியாளர்களிடம் கூறியதாவது,

புதுச்சேரியில் குளங்கள், நீர்நிலைகள் விரைவில் சீரமைக்கப்படும் என்றார்.  மேலும் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்  விரைவில் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறினார்.

புதுச்சேரியில் கடந்த 2009ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதன்பிறகு தேர்தல் நடைபெறாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. தொகுதி வரையறை செய்வதாக கூறி தேர்தல் நடத்துவதை மாநில அரசுகள் காலம் தாழ்த்தி வந்தன.

புதுச்சேரியில் உடடினயாக உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உச்சநீதி மன்றம் கடந்த மே மாதம் 8ந்தேதி வழங்கிய தீர்ப்பில்,  தொகுதி வரையறையை  நடவடிக்கையை விரைவாக முடித்து உள்ளாட்சி தேர்தலை நடத்த  நடவடிக்கை எடுக்குமாறு புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்து உள்ளார்.