புதுச்சேரி,

மே 1ந்தேதி முதல கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் வரும் மே 1ந் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கோர்ட்டு உத்தரவுபடி நாடு முழுவதும், இரு சக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்திலும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் புதுச்சேரியிலும் தற்போது இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் நாரயணசாமி  கூறியதாவது,

புதுச்சேரியில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் காங்கிரஸ் அரசு பதவி ஏற்றது முதல் சட்டம்- ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

குறிப்பாக கொலை, கொள்ளை, செயின்பறிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்முறை, போன்றவற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்.

கடந்த காலங்களில் பட்டப்பகலில் நகை பறிப்பு, வீடு புகுந்து கொள்ளை, கொலை சம்பவங்கள் தற்போது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் எங்களது அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் தற்போது சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார்கள். மேலும் வியாபாரிகளும், தொழில் அதிபர்களும் நிம்மதியாக தொழில் செய்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு 710 வாகன விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், தலைகவசம் அணியாத தால் 70 பேர் பலியாகி உள்ளனர். இதனை முற்றிலும் தடுக்கும் வகையில் புதுவையில் வருகிற மே மாதம் 1-ந்தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படு கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.