புதுச்சேரி: புதுச்சேரி மாநில  அமைச்சர் நமச்சிவாயம், கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக மாநில காங்கிரஸ் தலைவர் சுப்ரமணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசியல் அமைச்சராக பணியாற்றி வரும் நமச்சிவாயம், கட்சி மீதான அதிருப்தி காரணமாக,  இன்றுதனது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு டெல்லியில் பாஜகதேசியத் தலைவர் நட்டா முன்னிலை யில் பாஜகவில் இணைய உள்ளதாக  தகவல் பரவின. இந்த  நிலையில் அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக விடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது, மாநில தலைவராபக இருந்தவர் நமச்சிவாயம். அவருக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  வெற்றிபெற்றது, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வரானார்.  இதனால் நமச்சிவாயம் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து, அவருக்கு  பொதுப்பணித்துறை மற்றும் கலால்துறை அமைச்சர் பதவி வழங்கி சமாதானப்படுத்தப்பட்டது. இருந்தாலும் முதல்வருடனான அதிருப்தி தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவின. அமைச்சர்  நமச்சிவாயம் இன்று தனது அமைச்சர், எம்எல்ஏ பதவியை  ராஜினாமா செய்து  கடிதம் கொடுக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவின. தொடர்ந்து,  டெல்லி செல்லும் அவர், அங்கு  பாஜக தேசியத் தலைவர் நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதுகுறித்து  புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் சுப்ரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த போது முழு உரிமை கொடுக்கப்பட்டது. அமைச்சராக சுதந்திரமாக செயல்பட்டார். ஆனால் அவர் கட்சிக்கு மிக பெரிய துரோகம் செய்து விட்டார். இதன் காரணமாக அவர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அவருடன் செல்பவர்கள் மீது நடவடிக்கை பாயும்” என தெரிவித்துள்ளார்.