புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா உறுதி..

புதுச்சேரி: புதுச்சேரி மாநில அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், 245 நபர்களுக்கு  இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஏனாம் பகுதி 3 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையில்,  காரைக்காலில் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா கொரோனா உறுதியான நிலையில், அவர்  சிகிச்சையில் உள்ளார்.

இந்த நிலையில், ஆட்சியர் அலுவலக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் கமலக்கண்ணனும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில்,  கொரோனா தொற்று உறுதியானது, இதனையடுத்து, அவர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஏற்கனவே சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி கொரோனா தொற்றுக்கு ஆளான நிலையில்,  எம்எல்ஏ ஜெயபால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளார்.

தற்போது சிகிச்சையில் உள்ள இரு அமைச்சர்களும் நலமுடன் இருப்பதாக சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று 245 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதைத் தொடர்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 5,624ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,180 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,355 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் நேற்று 2 பேர் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் கொரனாவால் உயிரிழந்த வர்கள் எண்ணிக்கை 89ஆக உயர்ந்துள்ளது.