புதுச்சேரி:

‘‘புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி காங்கிரஸ் ஆட்சியை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் செயல்படுகிறார்’’ என்று அமைச்சர் கந்தசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘‘ புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் அரசாங்கத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார். இதன் மூலம் அவர் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் நிர்வாக ரீதியில் இழிவை ஏற்படுத்த முயற்சிக்கிறார்’’ என்றார்.

‘‘புதுச்சேரி அரசு ஊழியர்கள், கூட்டுறவு சங்கம் மற்றும் பொதுத் துறை நிறுவன ஊழியர்களின் பி. ஃஎப் பிடிமான தொகை சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் செலுத்தப்படவில்லை’’ என்று கிரண்பேடி குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தார்.

‘‘கிரண்பேடியின் இது போன்ற பேச்சு மக்களின் கவனத்தை திசை திருப்பி, சமூகமான நிர்வாக நடைமுறைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சிக்கும் செயலாகும். பி.ஃஎப் பணம் தொகை செலுத்தாது கடந்த ஆட்சியில் இருந்து நிலுவையில் உள்ளது.

புதுச்சேரியில் உள்ள பொதுத் துறை நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவை நஷடத்தில் இயங்கி வருகிறது. ஊழியர்களின் சம்பளத்திற்கே மானியம் வழங்கப்பட்டு வருகிறது. பி.ஃஎப் பிடித்தம் செலுத்துவது என்பது இபிஎப் நிர்வாகத்திற்கும் சம்மந்த்தப்பட்ட துறை நிர்வாகத்திற்கும் இடைப்பட்ட பிரச்னையாகும். இதில் அரசாங்கத்தில் பங்கு இல்லை’’ என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘மேலும், புதுச்சேரியில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தங்களது பிஎப் கணக்கில் பிடித்தம் செய்யப்படும் தொகையை செலுத்துவதை உறுதி செய்ய தொழிலாளர் ஆணையர் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கவர்னர், அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். எதிர்மறையான மற்றம் ஒத்துழையாமை போன்ற செயல்களின் கவர்னர் ஈடுபடக்கூடாது’’ என்றார்.

கடந்த மே மாதம் கிரண்பேடி பதவி ஏற்றது முதல் இது போன்ற செயல்பாட்டை தான் அவர் கடைபிடித்து வருகிறார். சமீபத்தில் நகராட்சி கமிஷனர் ஒருவர் இடமாற்ற உத்தரவை தலைமை செயலாளர் நிறுத்தி வைத்ததன் மூலம் இந்த பிரச்னை தற்போது சூடுபிடித்துள்ளது.

ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களின் புகார்களை தொடர்ந்தே அந்த அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார். அப்போது கிரண்பேடியும் ஊரில் இல்லை. இதன் பிறகு ‘‘இடமாற்ற உத்தரவு செல்லாது. அதிகாரிகளின் பணி தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை’’ என்றும் கிரண்பேடி தரப்பில் கூறப்பட்டது.

இதைதொடர்ந்து அந்த நகராட்சி கமிஷனர் கடந்த 3ம் தேதி மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்தப்பட்டார். புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் உத்தரவினன் பேரில் அவர் இடமாற்றம் செய்யப்ப்ட்ட அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் நாராயணசாமி ஏற்பாடு செய்தார். இதில் கிரண்பேடியின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதோடு இந்த பிரச்னையை ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரது கவனத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இது எப்போது என்று தேதி குறிப்பிடப்படவில்லை.