புதுச்சேரி:

சென்னை உயர்நீதி மன்றம் மதுரையின்  உத்தரவு காரணமாக புதுச்சேரி மாநில மக்களுக்கு நீதி கிடைத்திருப்பதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார்.

மக்களார் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் ஆவணங்களை, ஆளுநர் பார்வையிடலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கிரண்பேடிக்கு வழங்கிய அதிகாரம் தொடர்பான வழக்கில்,  மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய அதிகாரத்தை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்து உத்தரவிட்டது.

யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் ஆவணங்களை கேட்க துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்ற 2017 ஆம் ஆண்டு மத்திய அரசு புதிய உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து புதுச்சேரி எம்எல்ஏ லட்சுமி நாராயணன் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு காரணமாக புதுச்சேரி மாநில மக்களுக்கு நீதி கிடைத்துள்ளது என்று மகிழ்ச்சியுடன்  தெரிவித்துள்ளார்.