புதுச்சேரி:

புதுச்சேரியில் அரசு நிலம் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் கட்டிடங்களை ஒரு மாதத்திற்குள் இடிக்கும்படி புதுச்சேரி நகரமைப்பு குழுமம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியை அடுத்த துத்திப்ட்டு கிராமத்தில் தனியார் நிறுவனம் ஒன்று அரசு நிலம் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கிரிக்கெட் மைதானம் அமைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இந்த விவகாரத்தில் அதிரடியாக தலையிட்டு, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக வில்லியனூர் வட்டாட்சியர் அருண் அய்யாவு, சேதராப்பட்டு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இப்பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய லஞ்சஒழிப்புத் துறைக்கும் ஆளுநர் கிரண்பேடி பரிந்துரை செய்துள்ளார். அதேபோல் வில்லியனூர் உதவி ஆட்சியர் அஸ்வின் சந்துரு வருவாய்த்துறைக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் அந்த மைதானத்தில் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.

தற்போது தனியார் கிரக்கெட் மைதான முறைகேடு விவகாரத்தில், புதுச்சேரி ஆட்சியாளர்களுக்கும் – ஆளுனர் கிரண்பேடிக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள் தனியார் நிறுவனத்திற்கும் ஆதரவாகவும், கிரண்பேடி சட்டப்படியும் தங்களது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

கிரிக்கெட் மைதான கட்டுமான முறைகேட்டில் ஆளுநர் கிரண்பேடி அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது கிரிக்கெட் மைதானத்தில் புதுச்சேரி நகரமைப்பு குழுமத்தின் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்களை ஒரு மாதத்திற்குள் இடிக்குமாறு கிரிக்கெட் மைதான நிர்வாகிகளுக்கு நகரமைப்பு குழுமம் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை மீறும் பட்சத்தில் புதுச்சேரி நகரமைப்பு குழுமமே கட்டிடங்களை இடிக்கும் பணியை மேற்கொள்ளும் எனவும் அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.