ஜல்லிக்கட்டு: புதுச்சேரியில் இன்று அரசு ஆதரவுடன் முழு அடைப்பு

 

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி தமிழகம், புதுச்சேரி உட்பட தமிழர் வாழும் பகுதிகளில் எல்லாம் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வியாபாரிகள், தனியார் போக்குவரத்து வாகனங்கள், தனியார் பள்ளிகள் உட்பட அனைவரும் கலந்துகொள்வதாக அவரவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அரசு ஊழியர்கள் தற்செயல்விடுப்பு எடுத்து போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், ஆளும் காங்கிரஸ் அரசின் முதல்வர் நாராயணன், “தனியார் வாகன போக்குவரத்து இல்லாததால் புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளி கல்லூரிகள் இயங்காது” என்று அறிவித்துள்ளார். அதாவது, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான முழு அடைப்புக்கு, அம்மாநில அரசு மறைமுக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஆனால் தமிழகத்தில் அரசு பள்ளி கல்லூரிகள், அரசு பேருந்துகள் குறித்து மாநில அரசு எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.  மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, திருப்பூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமையன்று விடுமுறை என்று அந்தந்த மாவட்ட நிர்வாகம் மட்டுமே அறிவித்துள்ளன. ஏற்கனவே கல்லூரிகளுக்கு அந்தந்த கல்லூரி நிர்வாகம் காலவரையற்ற விடுமுறைகள் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.