ஒருமாத இழுபறிக்கு பிறகு ஒப்புதல்: ஜூலை 2ந்தேதி புதுச்சேரி மாநில பட்ஜெட் தாக்கல்

புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலத்தின் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 2ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1மாத இழுபறிக்கு பின் தற்போது மத்திய அரசு தற்போது ஒப்புதல் கொடுத்துள்ளதை தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

அன்றைய தினமே  முதல்வர் நாராயணசாமி மாநில நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வார் என புதுச்சேரி சட்டமன்றப் பேரவைச் செயலர் வின்சென்ட் ராயர் அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் 2018-19ம் ஆண்டுக்கான  வரைவு பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து, நாராயண சாமி தலைமையிலான  காங்கிரஸ் மாநில அரசு, ஆளுநர் கிரண் பேடி தலைமையிலான மாநில திட்டக்குழு கூடி, ரூ. 7,530 கோடி-க்கு மதிப்பீடு தயாரித்தது. மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால்,  மத்திய அரசு ஒப்புதல் தர தாமதப்படுத்தி வந்தது. சுமார் 1 மாதத்திற்கும் மேலாக மத்திய அரசு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததால் கடும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும், புதுச்சேரி மாநிலத்தில்  நிதி நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகியது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் மற்றும் அதிகாரிகளை 2 தடவை டில்லி சென்று  முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி வந்தார். இந்த நிலையிலும் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்போக்குடனேயே செயல்பட்டு வந்தது.

பட்ஜெட்டுக்கு அனுமதி பெற முடியாத நாராயணசாமி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அதிமுக எம்எல்ஏ அன்பழகன் கூறியிருந்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தற்போது புதுச்சேரி மாநில பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதைத்தொடர்ந்து ஜூலை 2ந்தேதி மாநில பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் என்றும், அன்றே முதல்வர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்றும் சட்டப்பேரவை செயலர் அறிவித்து உள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Puducherry State Budget Filing on July2: Official Announcement, ஜூலை 2ந்தேதி புதுச்சேரி மாநில பட்ஜெட் தாக்கல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-=-