புதுச்சேரி:
புதுச்சேரியில் பெண்களுக்காக கொரோனா தடுப்பூசி முகாமை நாளை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைக்கிறார். ராஜீவ்காந்தி அரசு மகளிர் மருத்துவமனையில் அவர் முதலில் தடுப்பூசி செலுத்திக் கொள்கிறார்.

புதுச்சேரியில் ராஜ்நிவாஸில் செய்தியாளர்களிடம் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் இன்று இரவு கூறியதாவது:

புதுச்சேரியில் ராஜீவ்காந்தி அரசு மகளிர் மருத்துவமனையில் பெண்களுக்கான தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது. நான் முதலில் தடுப்பூசி போட்டுக்கொண்டு முகாமை துவக்கி வைக்கிறேன்.

கொரோனா விலிருந்து முதல் பாதுகாப்பு முகக்கவசம், தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்வோரும், பிரச்சாரத்தை கேட்கவருவோரும், வாக்களிக்க உள்ளோரும் முகக்கவசம் அணியுங்கள்

வாக்களியுங்கள் என்று கேட்பது முன்பு முகக்கவசம் போடுங்கள் என்று கேட்கிறேன். பாதுகாப்புக்கு முகக்கவசம் போடுங்கள்.

தற்போது புதுச்சேரியில் ஊரடங்கு நடைமுறைப்படுத்த வேண்டிய நிகழ்வு ஏதுமில்லை. அது போன்ற நிகழ்வு வரக்கூடாது என்பதில் மிகக் கவனம் செலுத்துகிறோம்.

கடையடைப்பு, தனிமைப்படுத்துதல் மிக அபாயகர கட்டத்தை மீண்டும் சந்தித்துவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். தற்போது தொற்று அதிகரிக்கக் காரணம், நெருக்கமான இடத்தில் முகக்கவசம் அணியாமல் இருப்பதுதான் முக்கியக்காரணம். 50 சத தொற்றை முகக்கவசம் அணிவதால் குறைக்கலாம்.

“வாக்களியுங்கள் என்பதுபோல் முகக்கவசம் போடுங்கள்” என்று பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளோம்.  அபாயத்தை தடுக்க முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் போடவேண்டிய அவசியமில்லை. அபராதம் போட்டுதான் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற நிலை வரக்கூடாது.

நாமே முன்வந்து உணர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும். போலீஸார் கூட்டம் கூடும் இடத்தில் முகக்கவசம் அணிய வலியுறுத்துவார்கள். பிரச்சாரக் கூட்டத்துக்கு முகக்கவசம் அணிந்து செல்லுங்கள். தேவையான அளவு தடுப்பூசி இருக்கிறது. தட்டுப்பாடு இல்லை” என்று தெரிவித்தார்.