கோவை:

புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பிரதமர் மோடி என்று அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்த  பிரேமலதா விஜயகாந்த் கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக, பாமக உள்பட பல கட்சிகள் உள்ள நிலையில், பாஜக தலைவரான மோடிதான் புல்வாமா தாக்குதலை நடத்தினார் என்று தேர்தல் பிரசாரத்தில் பிரேமலதா உளறியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி நடைபெற உள்ளது.  தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது தேமுதிக. தற்போது விஜயகாந்த் உடல்நலமில்லாமல் இருந்து வருவதால், அவரது மனைவி பிரேமலதா  அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

நேற்று கோவை, கணபதி பகுதியில் கூட்டணி கட்சியான  பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ண னுக்கு ஆதரவாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  பிரசாரம் மேற்கொண்டார். அப்போது,   சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற முரசு சின்னத்துக்கு வாக்களியுங்கள் என தவறுதலாக குறிப்பிட்ட பிரேமலதா பின்னர் சுதாரித்துக்கொண்டு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தவர் பிரதமர் மோடி என்று கூறுவதற்கு பதிலாக புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பிரதமர் என்றும் மீண்டும் உளறினார். இது பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

பிரேமலதாவின் உளறல் வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது..