புல்வாமா தாக்குதல்: ”இந்தியா இனியும் மன்னிக்காது” – வைரமுத்துவின் கண்டனப் பதிவு

புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்ததற்கு கவிஞர் வைரமுத்து தனது கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளார். ’அகிம்சா தேசம் என்ற பெயர் பலகையை அவிழ்த்து வையுங்கள், இந்தியா இனியும் மன்னிக்காது’ கூறியுள்ளார்.

vairamuthu

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் நேற்று முன் தினம் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் சுமார் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது என்ற பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்தியாவில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இது உள்ளது. இந்த தாக்குதல் இந்தியாவை மட்டுமின்றி, உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் தமிழகத்தின் நெல்லை மாவட்டம் சீவலப்பேரியை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சிவசந்திரன் என்ற இரு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இத்தகைய கொடூர தாக்குதலுக்கு அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்த நிலையில் தமிழ் திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் வைரமுத்துவும் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவரது கண்டன பதிவில், “ எப்படி சகிப்போம் காஷ்மீர் ரோஜாக்களின் மாமிசம் அழிவதை, எப்படி பொறுப்போம் சிம்லா பனிக்கட்டிகள் சிவப்பாய் உறைவதை. ஏய் தீவிரவாதமே நீ புகுந்தது எல்லைப்புறத்தில் அல்ல, கொல்லைபுறத்தில்,

“வீரர்களின் பாதங்களில் வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர். ஓயமாட்டோம், சாயமாட்டோம்; தேசிய கீதத்தில் ஒப்பாரி ராகம் ஒட்டாது, தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்காது. அகிம்சா தேசம் பெயர் பலகையை அவிழ்த்து வையுங்கள், இந்தியா மன்னிகாது இனியும்” என ஆவேசமாகக் கூறியிருக்கிறார்.