புல்வாமா தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் ஒளிபரப்பப்பட்ட பாகிஸ்தான் லீக் தொடர் நிறுத்தம்!

ஜம்மு காஷ்மீரில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியை இந்தியாவில் ஒளிபரப்பு செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.

pakistan

ஆண்டுதோறும் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது போன்று பாகிஸ்தானில் பி.எஸ்.எல். என்ற பெயரில் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த தொடரின் 4வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் சர்வதேச நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். எனினும், இந்திய வீரர்கள் இதில் பங்கேற்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. \

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் -பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் தொடரை இந்தியாவில் ஒளிபரப்பு செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இவ்வளவு நாட்களாக ஒளிபரப்பு செய்து வந்த பாகிஸ்தான் லீக் தொடர் நேற்று முதல் ஒளிபரப்பாகவில்லை.

கடந்த 14ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் விடுமுறை முடிந்து பணியை தொடர்வதற்காக வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த இந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் வெண்டு குண்டுகளுடன் காரில் வந்து மோதினான். இதில் சுமார் 40 வீரர்கள் மரணமடைந்தனர்.

இந்த பயங்கர தாக்குதல் நாடு முழுவதும் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 சதவிகிதம் வரியை உயர்த்துவதாக மத்திய அமைச்சரவை கூறியுள்ளது. அதுமட்டுமின்றி, இந்தியாவிற்கு பாகிஸ்தான் ‘மிகவும் வேண்டத்தக்க நாடு’ என்ற அந்தஸ்தும் திரும்ப பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.