ஜம்மு:

காஷ்மீர் பிரச்சினை அரசியல்ரீதியாக தீர்க்கப்படாவிட்டால் புல்வாமா போன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும் என, காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான பரூக் அப்த்துல்லா எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் கூறும்போது, ” நடந்த தாக்குதல் சம்பவத்துக்காக ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களை குற்றஞ்சாட்டுவது தவறு. நீங்கள் எங்கள் குழந்தைகளை குறிவைக்கிறீர்கள்.

காஷ்மீர் பிரச்சினை அரசியல் ரீதியாக தீர்க்கப்படாவிட்டால் புல்வாமா போன்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும். தயவுசெய்து எங்களை அடிக்காதீர்கள். தீவிரவாதத்துக்கும் எங்கள் மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

நாங்கள் கௌரவத்தோடும் கல்வியறிவோடும் இரண்டு வேளை உணவுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஊரடங்குச் சட்டம் காரணமாக என் வீட்டின் அருகே உள்ள மசூதியில் ஏராளமான முஸ்லிம்கள் தஞ்சமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நடத்திய கூட்டம் தவறல்ல. ஆனால் எங்களது அபிலாசைகளை நீங்கள் கவனத்தில் கொள்ளவில்லை என்பதுதான் எங்களது ஆதங்கம்.

பொதுமக்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டும். நீங்கள் நீங்கள் தவறு செய்யாவிட்டாலும் உங்கள் மீது குற்றச்சாட்டு விழுகிறது நீங்கள் அமைதியாக இருந்து இந்த பிரச்சினைகளில் இருந்து மீள வேண்டும்
சில மக்கள் மத்தியில் குழப்பத்தை விளைவிக்க முயற்சிப்பார்கள் அவர்களின் எண்ணங்கள் ஈடேற நாம் அனுமதிக்கக்கூடாது.