வாழப்பாடி

யுத பூஜையை முன்னிட்டு பூசணிக்காய் விளைச்சல்  அமோகமாக இருந்தும் சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் வாட்டம் அடைந்துள்ளனர்.

நவராத்திரி தினத்தில் ஒன்பதாம் நாள் சரஸ்வதி பூஜை எனவும் ஆயுத பூஜை எனவும் கொண்டாடப்பட்டு வருவது தெரிந்ததே.  அன்று வீடுகள், அலுவலகங்கள், தொழிலகங்கள், கடைகள் போன்ற இடங்களில் பூஜை முடிந்த பின் பூசணிக்காயை திருஷ்டி கழிப்பதற்காக உடைப்பது வழக்கம்.  எனவே ஆயுத பூஜை நேரங்களில் பூசணிக்காய்களின் தேவை அதிகரித்து வருவது உண்டு.

இதையொட்டி விவசாயிகள் பலரும் குறிப்பாக தர்மபுரி மாவட்டம் வாழப்பாடி பகுதியில் பூசணிக்காய்களை பயிரிட்டு இருந்தனர்.  தற்போது அந்தப் பகுதியில் மழை நன்கு பெய்ததில் விளைச்சல் மிகவும் அதிகரித்துள்ளது.

சென்னைக்கு மிகுந்த அளவில் வாழப்பாடி பகுதியில் இருந்து பூசணிக்காய் வருவது வழக்கம். விவசாயிகள் பூசணிக்காயை அறுவடை செய்து விற்பனையை துவங்கினர். ஆனால் போதுமான விலை அவர்களுக்கு கிடைக்கவில்லை.  சென்ற முறை அதிகபட்சமாக ரூ.100 வரை விலை கொடுத்து வாங்கப்பட்ட பூசணிக்காய்களுக்கு தற்போது அதிக பட்சமாக ரூ. 50 கூட தர யாரும் முன் வரவில்லை.  இதனால் பூசணிக்காய் விவசாயிகள் கடும் வாட்டம் அடைந்துள்ளனர்.