புனே

ஸ்திரேலிய நோயாளி ஒருவருக்கு அவரை நேரில் காணாமலே இந்திய டாக்டர் ஒருவர் செயற்கை காதுகளை உருவாக்கி உள்ளார்.

விபத்தில் காதுகளை இழந்தோருக்கும் பிறவியிலேயே காதுகள் இல்லாதோருக்கும்  புனே நகரில் செயற்கை காதுகள் செய்யப்படுகின்றன.   இதற்காகப் பல வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மக்கள் வந்து செயற்கை காதுகளைச் செய்து பொருத்திக் கொள்கின்றனர்.  இந்த செயற்கை காதுகளை ஸ்ரீனிவாசன் என்னும் மருத்துவர் ஒரு தொழில்நுட்பக் குழுவுடன் இணைந்து தயாரித்து வருகிறார்.

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரைச் சேர்ந்த ஒருவருக்குப் பிறவியிலேயே காதுகள் இல்லாமல் இருந்தது. அவர் தனக்கு காது இல்லாததால் கடும் தாழ்வு மனப்பான்மை மற்றும் விரக்தியுடன் இருந்துள்ளார்.   அவர் கடந்த மார்ச் மாதம் இந்தியாவுக்கு வந்து புனே நகரில் செயற்கை காதுகளைப் பொருத்திக் கொள்ள விரும்பி பதிவு செய்தார்.  ஆனால் கொரோனா காரணமாக அவரால் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இதையொட்டி அவருடைய புகைப்படம், வீடியோ போன்றவற்றை வைத்து செயற்கை காதுகள் செய்ய வேண்டிய நிலை உண்டானது.  அத்துடன் அவருடைய உடல் நிறத்துக்கு ஏற்ப காதுகளை அமைக்க வேண்டியதும் இருந்தது.   அவ்வாறு அமைக்கப்பட்டால் மட்டுமே செயற்கை காதுகளைக் காண்போருக்கு வித்தியாசம் தெரியாமல் இருக்கும்.   ஸ்ரீனிவாசன் தனது குழுவினருடன் பணியைத் தொடங்கினார்.

இதற்காக மாடல் ஒருவர் நியமிக்கப்பட்டார்.  அவரை சோதித்து சிறிது சிறிதாக அளவுகள் எடுத்து செயற்கை காதுகள் வடிவமைக்கப்பட்டன.  அதன் பிறகு அந்த காதுகளுக்கு உடலின் நிறம் ஏற்றப்பட்டு காதுகள் தயாராகின. தற்போது அந்த காதுகள் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டுப் பொருத்தப்பட்டுள்ளன.  கண்ணால் காணாமலேயே செய்யப்பட்ட காதுகள் கச்சிதமாகப் பொருந்தி உள்ளன.