தண்ணீர் சிக்கனம் : அரை கிளாஸ் தண்ணீர் வழங்கும் புனே உணவு விடுதிகள்

புனே

புனே உணவு விடுதிகளில் தண்ணீரை மிச்சம் செய்ய அரை கிளாஸ் குடிநீர் மட்டுமே வழங்கப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் உள்ளது. எனவே குடிநீர் வீணாவதை தடுக்க மகாராஷ்டிரா அரசு பல நடவடிக்கைகள் எடுத்டு வருகின்றன. குறிப்பாக மகாராஷ்டிராவில் உள்ள புனே நகரில் குடிநீருக்கு மிகவும் தட்டுப்பாடு உள்ளது. அதற்காக குடிநீரை மிச்சம் செய்ய புனே மாநகராட்சி பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

புனே மாநகராட்சிக்கு உதவ புனே உணவு விடுதி உரிமையாளர் சங்கமான பிராஹா சமீபத்தில் ஒரு ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியது. அந்த கூட்டத்தின் முடிவில் இனி உணவு விடுதிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு முதலில் அரை கிளாஸ் குடிநீர் மட்டுமே வழங்க வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டது. அத்துடன் அந்த நீர் தீர்ந்ததும் வாடிக்கையாளர்கள் மேலும் குடிநீர் கேட்டால் மட்டுமே தர வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கையில் புனேவில் பிராஹாவை சேர்ந்த 800 உணவு விடுதிகளில் அமைப்பில் இணையாத 3500 சிறு உணவு விடுதிகளும் பங்கேற்றுள்ளன. இது குறித்து பிராஹா சங்கத் தலைவர் கணேஷ் ஷெட்டி, “புனேவில் தற்போது கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. இதனால் நகரில் பல இடங்களில் அரை கிளாஸ் தண்ணீர் என்னும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்பு எங்களுக்கு தினமும் 1600 லிட்டர் குடிநீர் செலவாகி வந்தது. தற்போது அதில் சுமார் 50% குடிநீரை மிச்சம் செய்துள்ளோம். அதைத் தவிர வீடுகளில் குடிநீரை சிக்கனமாக செலவு செய்வது குறித்து ஓட்டலில் கார்டுகள் மற்றும் போர்டுகளை அமைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.