உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் – தங்கத்தை காயம் தடுக்க வெள்ளி வென்றார் இந்தியாவின் தீபக் புனியா

நூர் சுல்தான்: கஜகஸ்தான் நாட்டில் நடந்துவரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் தீபக் புனியாவுக்கு, காயம் காரணமாக வெள்ளிப் பதக்கம்தான் கிடைத்தது.

இதனால் இந்திய மல்யுத்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கஜகஸ்தான் நாட்டில் உலக மல்யுத்த சாம்பியன் போட்டி நடந்து வருகிறது. இதில் 86 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட இந்தியாவின் தீபக் புனியா சிறப்பாக செயல்பட்டார். அவர் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், அதிலும் வென்றார்.

பின்னர், தங்கத்திற்கான இறுதிப்போட்டியில் அவர் ஈரானின் ஹசனுடன் மோதுவதாக இருந்தது. ஆனால், அரையிறுதியில் அவருக்கு முழங்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது.

இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே, அந்த காயம் பிரச்சினை ஏற்படுத்த, இறுதிப்போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் தீபக். இதனையடுத்து ஈரான் வீரர் தங்கத்தை பெற்றுக்கொள்ள, புனியாவிற்கு வெள்ளியே கிடைத்தது.