திருச்சி:

தீபாவளிக்கு பட்டாசு வெடித்தல், மெகந்தி வைத்த மாணவர்களுக்கு தனியார் கிறிஸ்துவ பள்ளி தண்டனை வழங்கியது திருச்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி பாலக்கரை கீழப்புதூரில் செர்வைட் மெட்ரிகுலேசன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். தீபாவளி பண்டிகை முடிந்து நேற்று முன்தினம் பள்ளி இயங்கியது.

காலை 9 மணி அளவில் இறை வணக்கம் தொடங்கிய போது, தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடித்தவர்கள் கையைத் தூக்குங்கள் என்றும் ஆசிரியர்கள் கேட்க, 7 பேரை தவிர மற்ற மாணவ-மாணவிகள் கை தூக்கினர். பிறகு பட்டாசு வெடிக்காத மாணவ-மாணவிகளுக்கு மட்டும் பள்ளி சார்பில் பாராட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டது.

மற்ற மாணவ-மாணவிகளை கைகளை கட்டிக்கொண்டு இறை வணக்கம் முடியும்வரை தலை குனிந்து நிற்கும்படி கூறி தண்டனை அளிக்கபப்ட்டது. இதேபோல் கையில் மெகந்தி வைத்து இருந்த ஒரு மாணவியை ஆசிரியர் ஒருவர் அடித்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட மாணவ- மாணவிகள் இந்த விசயத்தை தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் பா.ஜனதா கட்சியை சேர்ந்த சிலர் பள்ளியை முற்றுகையிட்டு, தீபாவளி பட்டாசு வெடித்ததற்காக மாணவர்களுக்கு எப்படி தண்டனை கொடுக்கலாம் என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பள்ளி நிர்வாகத்தினர், “எங்களுக்கு கல்வித்துறை அதிகாரிகளிடம் இருந்தும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்தும் பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுவது குறித்து மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சுற்றறிக்கை வந்தது.

அதன் அடிப்படையில் தான் மாணவ-மாணவிகளை கண்டித்தோம்” என்றனர். இதையடுத்து பெற்றோர் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் அங்கிருந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு சென்று, பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தனர். இது தொடர்பாக பாலக்கரை காவல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று காலை திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.