பரிதாப மும்பை அணி – 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப் அணி!

சென்னை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில், 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது பஞ்சாப் அணி.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 131 ரன்கள் மட்டுமே சேர்த்து, ராகுலின் அணிக்கு எளிய இலக்கையே நிர்ணயித்தது. இந்நிலையில், தனது இரண்டாவது வெற்றியை நோக்கி களமிறங்கியது பஞ்சாப் அணி.

அந்த அணியின் கேப்டன் ராகுல், 52 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து, இறுதிவரை களத்தில் நின்றார். அதில், 3 சிக்ஸர்கள் & 3 பவுண்டரிகள் அடக்கம். மயங்க் அகர்வால் 20 பந்துகளில், 25 ரன்கள் அடித்து அவுட்டானார்.

கிறிஸ் கெய்ல், 35 பந்துகளில் 43 ரன்களை அடித்து அவுட்டாகாமல் களத்தில் நின்றார். இதில், 2 சிக்ஸர்கள் & 5 பவுண்டரிகள் அடங்கும். இறுதியில், 17.4 ஓவர்களிலேயே, 1 விக்கெட் மட்டுமே இழந்த பஞ்சாப் அணி, 132 ரன்களை அடித்து, தனது இரண்டாவது வெற்றியை ஈட்டியது.

இந்த வெற்றியின் மூலம், பஞ்சாப் அணி, புள்ளிப் பட்டியலில், கடைசி இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது. மும்பை அணி 4வது இடத்திலேயே நீடிக்கிறது.