நேற்று சூப்பர் ஓவர் தினம் – ஃபினிஷிங்கில் சொதப்பிய பஞ்சாப் சூப்பர் ஓவரில் மும்பையை வென்றது!

துபாய்: மும்பை அணிக்கெதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றது பஞ்சாப் அணி. சேஸிங் செய்யும்போது மற்றொருமுறை ஃபினிஷிங்கில் சொதப்பியுள்ளது பஞ்சாப் அணி.

அக்டோபர் 18ம் தேதியான நேற்று நடைபெற்ற 2 போட்டிகளிலுமே(ஐதராபாத் vs கொல்கத்தா & மும்பை vs பஞ்சாப்) சூப்பர் ஓவர் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இதன்மூலம் நேற்றைய தினம் சூப்பர் ஓவர் தினமாக அமைந்தது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 176 ரன்களை சேர்த்தது. பின்னர், களமிறங்கிய பஞ்சாப் அணியில் கேப்டனும் துவக்க வீரருமான கேஎல் ராகுல் 51 பந்துகளில் 3 சிக்ஸர்கள் & 7 பவுண்டரிகளுடன் 77 ரன்களை அடித்தார்.

கிறிஸ்கெய்ல் மற்றும் பூரான் ஆகியோர் தலா 24 ரன்களை அடித்தனர். ஆனால், பூரான் எடுத்துக்கொண்ட பந்துகள் 12 மட்டுமே. கெய்ல் 21 பந்துகளை எடுத்துக்கொண்டார். தீபக் ஹுடா 23 ரன்களை அடிக்க, 20 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை எடுத்து ஆட்டத்தை சமன் செய்தது பஞ்சாப் அணி.

இதனால், ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றது. இதில், பஞ்சாப் தரப்பில் கிறிஸ்கெய்ல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். அவர்கள் இருவரும் 4 பந்துகளில் 15 ரன்களை அடித்தனர்.

பின்னர், மும்பை அணியின் சார்பில் களமிறங்கிய பொல்லார்டு, ஹர்திக் பாண்ட்யா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரால் 11 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்ததால், பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.

3 பந்தில் 3 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவை என்று இருந்தபோதும்கூட, பஞ்சாப் அணியால் எளிதாகப் போட்டியை வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்திலும் சேஸிங்கில் சொதப்பி, கடைசிப் பந்துவரை ஆட்டத்தை எடுத்துச் சென்றது அந்த அணி என்பது குறிப்பிடத்தக்கது.