அமிர்தசரஸ்:

பாகிஸ்தான் இன்று விடுதலை செய்யும், இந்திய விமானி, அபிநந்தனை வரவேற்க வாகா எல்லையில் கோலாகல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அபிநந்தனை நேரில் சென்று வரவேற்க பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் வாகா எல்லை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகளை வேட்டையாடிய இந்திய விமானப்படை வீரர்களில் ஒருவரான அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிறைபட்ட நிலையில், உலக நாடுகளில் வற்புறுத்தல் காரணமாக இன்று விடுவிக்கப்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்தார்.

இதையடுத்து, அபிநந்தன் இன்று  பாகிஸ்தானிலிருந்து இந்தியா திரும்புகிறார். அவர் வாகா எல்லை வழியாக இந்தியா வருவதாக தகவல் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில், அபிநந்தனை வரவேற்க அனுமதி அளிக்குமாறு பிரதமர் மோடியிடம் பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் அனுமதி கோரியிருந்தாகவும், அதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அபிநந்தனுக்கு பாகிஸ்தானில் உடல் பரிசோதனை நடைபெற்றதை தொடர்ந்து,  இன்று பிற்பகல்  வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என கூறப்படுகிறது.

வாகா வழியாக இந்தியா வரும் அபிநந்தனை வரவேற்க பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் நேரில் செல்ல இருப்பதாகவும், அவருடன் மத்திய அரசின் முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அபிநந்தனை வரவேற்க  மேள, தாளங்களுடன் ஏராளமான பொதுமக்கள்  குவிந்து வருகின்றனர்.