ண்டிகர்

ந்திரா காந்தி கொலைக்குப் பின் சீக்கியர்கள் மீது நடைபெற்ற தாக்குதல் வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை பஞ்சாப் முதல்வர் வரவேற்றுள்ளார்.

கடந்த 1984 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவருடைய மெய்க்காப்பாளர்களாக இருந்த சீக்கியர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார்.  அதைத் தொடர்ந்து சீக்கியர்கள் மீது கடும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.   இந்தக் கலவரத்தில் பலர் கொல்லப் பட்டனர்.   இதை ஒட்டி 186 வழக்குகள் பதியப் பட்டுள்ளன.   இந்த வழக்குகளை விசேஷ அமர்வின் கீழ் மீண்டும் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் வரவேற்றுள்ளார்.   அவர், “இந்த வன்முறை நடந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.   இதில் பலர் கொல்லப்பட்டனர்.   அதுமட்டுமின்றி பலர் வீடிழந்து தெருவுக்கு வந்தனர்.   இவர்களுக்கு இந்த மறு விசாரணை மூலம் நீதி கிடைக்கும் என நம்புகிறேன்.   விசேஷ அமர்வின் மூலம் விசாரிப்பதனால் பல உண்மைகள் வெளி வந்து உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் என நம்புகிறேன்”  என தெரித்துள்ளார்.

முதல்வருக்கு சிரோமணி அகாலி தள் தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான சுக்பீர் சிங் பாதல் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.   அவர், “கடந்த 1984 ஆம் ஆண்டு நடந்த கலவரத்துக்கு முக்கிய காரணம்  காங்கிரஸ் கட்சிதான்.   அந்தக் கலவரத்தை தூண்டி விட்ட காந்தி குடும்பத்தினர் அளித்த பதவியில் அமரீந்தர் சிங் இருப்பது அவமானகரமானது.   அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.    அத்தனை சீக்கியர்களைக் கொன்றவர்களிடம் இருந்து இவர் பதவி பெற்றுள்ளது கண்டிக்கத்தக்கது” எனக் கூறி உள்ளார்.