கச்சிதமாக வேலையை முடித்த 3 பஞ்சாப் பேட்ஸ்மென்கள் – பெங்களூரு தோல்வி!

ஷார்ஜா: பெங்களூரு அணி நிர்ணயித்த 172 ரன்கள் என்ற இலக்கை, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டி, தனது இரண்டாவது வெற்றியை இத்தொடரில் பதிவுசெய்தது பஞ்சாப் அணி.

நீண்ட காத்திருப்பிற்குப் பின்னர், ஒரு வெற்றியை மீண்டும் சுவைத்துள்ளது பஞ்சாப் அணி.

இத்தொடரில் முதன்முறையாக களமிறங்கிய அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல், 45 பந்துகளில் 5 சிக்ஸர்கள் & 1 பவுண்டரியுடன் 53 ரன்கள் எடுத்தார். அவர் ரன்அவுட் ஆனார்.

துவக்க வீரர் கேப்டன் ராகுல், கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 49 பந்துகளில், 5 சிக்ஸர்கள் & 1 பவுண்டரியுடன் 61 ரன்களை விளாசினார்.

மயங்க் அகர்வால் 25 பந்துகளில் 3 சிக்ஸர்கள் & 4 பவுண்டரிகளுடன் 45 ரன்களை அடித்தார். கடைசி நேரத்தில் களமிறங்கிய நிக்கோலஸ் பூரான் 1 பந்தை மட்டுமே சந்தித்து 1 சிக்ஸர் அடிக்க, பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றது.

சரியாக 20 ஓவர் முடிவில், 2 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை எடுத்தது பஞ்சாப் அணி.

பெங்களூரு பந்துவீச்சாளர் முகமது சிராஜ், 3 ஓவர்கள் மட்டுமே வீசி 44 ரன்களை வழங்கியதோடு, எந்த விக்கெட்டும் எடுக்கவில்லை.

பெங்களூருவை ஏற்கனவே பஞ்சாப் அணி 97 ரன்களில் பிரமாண்டமாக வென்றிருந்தது. தற்போது மீண்டும் வென்றுள்ளது.