சண்டிகர்: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட, பஞ்சாப் டிஐஜி லக்மிந்தர் சிங் ஜகார் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சிறை ஊழியர்களிடம் ஒவ்வொரு மாதமும் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அவர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை லக்மிந்தர் மறுத்து வந்த நிலையில், டிஐஜி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக மாநில உள்துறை செயலருக்கு, அவர் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் லக்மிந்தர் சிங் ஜகார் கூறி உள்ளதாவது: விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாய சகோதரர்களுக்கு ஆதரவாக முடிவெடுத்து உள்ளேன். நாள் அனைத்து சம்பிரதாயங்களையும் பூர்த்தி செய்துள்ளேன்.

எனவே, எனது ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதில் எந்த இடையூறும் இருக்காது என்று நினைக்கிறேன். விவசாய குடும்பத்தில் பிறந்தவன் நான். எனது முன்னோர்களின் விவசாய நிலத்தில் கிடைத்த வருமானம் மூலம் வளர்ந்தவன். இந்த நேரத்தில், எனது விவசாய சகோதரர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆகையால் நேற்று முதல் நான் பணியில் இருந்து ஓய்வு பெற்றதாக எடுத்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.