விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு: 24ந்தேதி முதல் பஞ்சாபில் ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு

சென்னை:  மத்தியஅரசு அறிமுகப்படுத்தி உள்ள, வேளாண் மசோதாக்களுக்கு எதிராக 3 நாட்கள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என பஞ்சாப் விவசாய சங்கம் அறிவித்து உள்ளது.

1) விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா,

2) விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா,

3) அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா – ஆகிய  3 விவசாயம் தொடர்பான மசோதாக்களை மத்தியஅரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இந்த மசோதாவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக வடமாநில விவசாயிகள் இந்த மசோதாக்களுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) முறையை அகற்றுவதற்கு வழி வகுக்கும் என்றும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். விவசாயத்தை அழிக்கும் இந்த மசோதாக்களுக்கு  பாஜக கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளமும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அந்த கட்சியைச்சேர்ந்த மத்தியஅமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது மந்திரி பதவியை உதறி தள்ளினார்.

இந்த நிலையில் பஞ்சாப் மாநில விவசாயிகள், மசோதாவை திரும்ப பெறக்கோரி, ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.

அதன்படி,  வரும் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை ரெயில் மறியல் போராட்டம் (ரயில் ரோகோ) நடத்த விவசாய சங்கம் முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பை கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு ( kisan mazdoor sangharsh committee) விவசாய சங்க பொதுச்செயலாளர் சர்வான் சிங் பாந்தர் அறிவித்து உள்ளார்.

இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த புதன்கிழமை   பஞ்சாப் மற்றும் அரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.