சண்டிகர்:

நர்சரி முதல் முனைவர் பட்டம் வரை பெண்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்திர் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், பஞ்சாப் அரசின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘‘அரசுப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இலவசமாக பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் ப்ரி கே.ஜி, எல்.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படும்.

மாநில கல்வி முறையை சீரமைக்கும் வகையில் அடுத்த கல்வியாண்டு முதல் இது அமல்படுத்தப்படும். 13 ஆயிரம் அரசு ஆரம்ப பள்ளிகள் மற்றும் 48 அரசுப் பள்ளிகளில் இலவச இன்டர்நெட் சேவை ஏற்படுத்தி கொடுக்கப்படும்’’ என்றார்.

முதல்வர் அமரீந்தர் சிங் விதான் சபாவில் பேசுகையில், ‘‘கல்வி துறைக்கு மாநில அரசு முக்கியத்துவம் கொடுத்து பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியாண்டில் புதிதாக 5 கல்லூரிகள் தொடங்கப்படும்.

வசதி இருப்பவர்கள் மட்டுமே அனைத்து விதமான கல்வியையும் பெற முடியும் என்ற நிலையை மாற்றி அனைத்து தரப்பு மாணவ மாணவிகளும் சிறந்த கல்வி நிறுவனங்களில் இணைந்து பயிலும் வாய்ப்பு ஏற்ப டுத்தி கொடுக்கப்படும்’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘கல்வி துறையை மேம்படுத்தும் வகையில் பாடப் புத்தகங்கள் அனைத்தும் ஆன்லைனில் வெளியிடப்படும். இதை மாணவ மாணவிகள், பெற்றோர் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி விருப்ப தேர்வாக இருக்கும். வரும் ஜூலை மாதத்தில் பரிட்சாத்திர முறையில் ஆங்கில வழி வகுப்புகள் ஒரு கல்வி வட்டாரத்திற்கு குறைந்தபட்சம் 2 ஆரம்ப, ந டுநிலை, உயர், மேல்நிலைப் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்படும்.

நர்சரி முதல் முனைவர் பட்டம் வரை பெண்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும். ராணுவத்தில் சேர பயிற்சி அளிக்கும் வகையில் குருதாஸ்ப்பூர், மான்சா, மொகாலியில் உள்ள மகராஜா ரஞ்சித் சிங் அகாடமியில் சாய்னிக் பள்ளிகள் தொடங்கப்படும்’’ என்றார்.