சென்னை அணிக்கு 154 ரன்களை இலக்காக நிர்ணயித்த பஞ்சாப் அணி!

அபுதாபி: சென்னை அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது.

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச முடிவெடுத்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியில், கேப்டன் கேஎல் ராகுல் 27 பந்துகளுக்கு 29 ரன்களும், மயங்க் அகர்வால் 15 பந்துகளுக்கு 26 ரன்களும் அடிக்க, கிறிஸ் கெய்ல் இன்று சேர்த்ததோ 19 பந்துகளில் 12 ரன்கள். 1 சிக்ஸர் & 1 பவுண்டரிகூட அவர் அடிக்கவில்லை.

‍அதேசமயம், அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் பின்வரிசையில் வந்த தீபக் ஹுடா. 30 பந்துகளை சந்தித்த அவர் 4 சிக்ஸர்கள் & 3 பவுண்டரிகளுடன் 62 ரன்களை விளாசினார்.

இதனால், பஞ்சாப் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை சேர்க்க முடிந்தது.

சென்னை அணி சார்பில் லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இம்ரான் தாஹிர் 4 ஓவர்கள் வீசி 24 ரன்களைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார்.

இந்தப் போட்டியானது, இந்த இரு அணிகளுக்குமே கடைசி லீக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.