துபாய்: பஞ்சாப் – ஐதராபாத் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 43வது போட்டி, பந்துவீச்சாளர்கள் பெரியளவில் ஆதிக்கம் செலுத்தியப் போட்டியாக மாறியது.
‍பொதுவாக, டி-20 என்றாலே, அதை பேட்ஸ்மென்கள் ஆதிக்கம் செலுத்தும் போட்டி என்பார்கள். அதுதான் நடைமுறை உண்மையும்கூட. ஆனால், நேற்றைய ஆட்டம் சற்று வித்தியாசமாக அமைந்துவிட்டது.
நினைத்தால் 200 ரன்களைத் தாண்டக்கூடிய பஞ்சாப் அணி, முதலில் பேட்டிங் ச‍ெய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் நிக்கோலஸ் பூரான் அடித்த 32 ரன்கள்தான் அந்த அணியின் அதிகபட்ச ரன்கள்.
இந்த எளிய இலக்கை நிச்சயமாக எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஐதராபாத் அணியின் ஆட்டம் வேறுமாதிரியாக இருந்தது. அந்த அணியின் டேவிட் வார்னர் அடித்த 35 ரன்கள்தான் அந்த அணியின் அதிகபட்ச ரன்கள்.
மொத்தமாக 19.5 ஓவர்கள் ஆடிய ஐதராபாத் அணி, 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது. ஆக மொத்தத்தில், நேற்று இரண்டு இன்னிங்ஸிலும் 17 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன.
அதேபோன்று, இரண்டு அணிகளின் இன்னிங்ஸிலும் சேர்த்து எடுக்கப்பட்ட மொத்த ரன்கள் 240 மட்டுமே. இந்த ஐபிஎல் தொடரில், ஒரு அணி முதலில் பேட்டிங் செய்து எடுத்த குறைந்த ரன்கள்(126) பாதுகாக்கப்பட்டு, அந்த அணி வெல்வது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் அணியில், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னாய் மற்றும் கிறிஸ் ஜோர்டான் போன்ற பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த, ஐதராபாத் அணியில், ரஷித் கான், சந்தீப் ஷர்மா மற்றும் தங்கராசு நடராஜன், ஹோல்டர் போன்றோர் ஆதிக்கம் செலுத்தினர்.