துபாய்: புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த டெல்லியை, 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது பஞ்சாப் அணி. இந்த வெற்றியால், புள்ளிப் பட்டியலில் ஐந்தாமிடத்திற்கு முன்னேறியுள்ளது அந்த அணி.
முதலில் களமிறங்கிய டெல்லி அணி, ஷிகர் தவான் மட்டுமே சிறப்பாக விளையாடி சதமடித்த நிலையில், 20 ஓவர்களில் 164 ரன்களை அடித்தது.
பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணியில், கேப்டன் ராகுல் இந்தமுறை 15 ரன்களுக்கே அவுட்டானார். மயங்க் அகர்வாலும் ரன்அவுட் செய்யப்பட, கிறிஸ்கெயில் சற்று அதிரடி காட்டினார்.
மொத்தம் 13 பந்துகளை சந்தித்த அவர், 2 சிக்ஸர்கள் & 3 பவுண்டரிகளுடன் 29 ரன்களை அடித்தார். அடுத்துவந்த நிக்கோலஸ் பூரான் ஆட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டார். 28 பந்துகளை சந்தித்த அவர் 3 சிக்ஸர்கள் & 6 பவுண்டரிகளுடன் 53 ரன்களை வெளுத்தார்.
பின்னர் வந்த கிளென் மேக்ஸ்வெல் 24 பந்துகளில் 32 ரன்களை அடித்து கிட்டத்தட்ட வெற்றியையும் உறுதிசெய்தார். இவர்களின் அதிரடியால், பஞ்சாப் அணிக்கு ஒருகட்டத்தில் பந்துகளைவிட ரன்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
இதனால், பின்வரிசையில் இறங்கிய தீபக் ஹுடா, நிதானமாக ஆடி 22 பந்துகளில் 15 ரன்களையே அடித்தார். ஜேம்ஸ் நீஷம் 8 பந்துகளில் 10 ரன்களை அடிக்க, 19 ஓவர்களிலேயே 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் அணி.
டெல்லி அணியின் பவுலர் துஷார் தேஷ்பாண்டே 2 ஓவர்கள் மட்டுமே வீசி, விக்கெட் எதுவும் எடுக்காமல் 41 ரன்களை அள்ளி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.