பஞ்சாப்: இளம் பாடகர் கொலை… காதல் விவகாரம் காரணமா?

 

சண்டிகர்: பஞ்சாபில் வளர்ந்து வரும் பாடகர் நவ்ஜோத் சிங் சுட்டுக் கொல்லப்பட்டது காதல் விவகாரத்தினாலேயா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் நவ்ஜோத் சிங்(வயது 22). வளர்ந்து வரும் பாடகரான இவர் சண்டிகர் அருகே உள்ள எஸ்.ஏ.எஸ். நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தோரா பஸ்ஸி பகுதியில் நவ்தீப் சிங் உடம்பில் 5 குண்டுகளுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரை மர்ம நபர்கள் மிக அருகில் இருந்து சுட்டுக் கொன்றுள்ளனர்.

அவரது நிஸ்ஸான் மைக்ரா கார் அவரது உடல் கிடந்த இடத்திற்கு அருகில் நின்றது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர், “நவ்தீப் அவருடைய பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை. தொழில் விரோதம் இருப்பதாகவும் தெரியவில்லை.  அவர் கொலை செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தனது தாய்க்கு போன் செய்து தனது சொந்த ஊரான பெஹ்ரா கிராமத்திற்கு திரும்பி வருவதாக தெரிவித்திருக்கிறார்.  இறப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்று நவ்தீப் சிங் ஒரு உணவகத்திற்கு அருகே ஒரு பெண்ணுடன் அமர்ந்திருந்ததை அவரது உறவினர் பார்த்துள்ளார். காதல் விவகாரம் தொடர்பாக நவ்தீப் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தனர்.