பஞ்சாப் அரசு அறிவித்துள்ள பெண்களுக்கான புதிய பாதுகாப்புத் திட்டம்!

சண்டிகர்: இரவு நேரங்களில் எளிதாக வீட்டிற்குச் செல்ல முடியாமல் வெளியிடங்களில் தவிக்கும் பெண்களுக்கு உதவும் வகையிலான ஒரு புதிய பாதுகாப்புத் திட்டத்தை பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.

தெலுங்கானாவில் பெண் டாக்டர் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, பெண்களின் பாதுகாப்புக் குறித்து நாடெங்கிலும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இதனையடுத்து பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி, இரவுநேரத்தில் வெளியிடங்களில் தவிக்கும் பெண்கள், 100 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுத்து தெரிவித்தால் போதும்.

காவல் துறையினர் அந்த இடத்தி‍ற்கே வந்து, சம்பந்தப்பட்டப் பெண்ணை மீட்டு, வீட்டில் கொண்டுபோய் பத்திரமாக சேர்ப்பர். மேலும், இரவு 9 மணிமுதல் அதிகாலை 6 மணிவரை தங்களின் பாதுகாப்பிற்காக பெண்கள் அழைக்கும் வகையில் தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, 100, 112 மற்றும் 181 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டால், அது காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.