விவசாயிகளுக்கு குறைந்தபட்ச உத்தரவாத தொகையை நேரடியாக வழங்கவுள்ள பஞ்சாப் அரசு!

சண்டிகர்: நேரடி பலாபலன் பரிமாற்றத்திலிருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு விலக்களிக்க, மத்திய அரசு மறுத்துவிட்டதால், மாநில அரசே, விவசாயிகளுக்கு, குறைந்தபட்ச உத்தரவாத தொகையை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயலுடன் நடைபெற்ற 2 மணிநேர பேச்சுவார்த்தைக்குப் பிறகும், பஞ்சாப் அரசின் இந்தக் கோரிக்கை ஏற்கப்படாத காரணத்தால், மாநில அரசிற்கு வ‍ேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளார் அம்மாநில நிதியமைச்சர் மன்பிரீத் பாதல்.

“டிபிடி எனப்படும் நேரடி பலாபலன் பரிமாற்ற முறையிலிருந்து விலக்கு அளிப்பதற்கான எங்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. எனவே, எங்களுக்கு வேறு வழியில்லை. எனவே, மாநில அரசு அதன் சொந்த முடிவை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது.

எனவே, அரித்யாஸ் என்ற அமைப்பின் மூலம், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச உத்தரவாத விலையை வழங்க முடிவெடுத்துள்ளோம்” என்றுள்ளார் நிதியமைச்சர்.

இதே கருத்தை அம்மாநில உணவு அமைச்சரும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த நடைமுறையின்மூலம், அரித்யாஸ் என்ற அமைப்பிற்கு பாதுகாப்பு கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மாநில முதல்வர் விரைவில் அரித்யாஸ் அமைப்புகளுடன், இதுதொடர்பாக சந்திப்பை நிகழ்த்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.