இரண்டு பட்ட கூத்தாடிகள்..  குழப்பத்தில் கோடம்பாக்கம்..

புஷ்பேந்திரனின் சிறப்பு பதிவு

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படம் தங்களுக்கு நஷ்டத்தை தந்துள்ளதால் இழப்பீடு தர வேண்டும் என படத்தை வாங்கிய விநியோகதஸ்கர்கள்  போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இன்னொரு புறம் –

நடிகர் விஜய் மீதான வருமான வரி சோதனை மற்றும் பா.ஜ.க.வினர் விஜய் படப்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தும் போராட்டம்.

இரண்டு விஷயங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லையென்றாலும் ,சினிமா காரணமாக இவை இரண்டும் ஒரே புள்ளியில் சந்தித்து கோடம்பாக்கத்தை இரண்டு படுத்தியுள்ளது.

முதலில் தர்பார் ,விஷயத்துக்கு வருவோம்.அந்த படம் நஷ்டத்தை ஏற்படுத்தி இருந்தால், விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளரிடம் தான் இழப்பீடு கேட்க வேண்டும்.

 

அதனை விடுத்து ரஜினி வீட்டை முற்றுகையிடுவது,இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை மிரட்டுவதும், அவருக்கு எதிராக போஸ்டர் அச்சடித்து ஒட்டுவதும் என வினியோகஸ்தர்கள் புதிய அஸ்திரத்தைக் கையில் எடுத்திருப்பதை கோடம்பாக்கம் ரசிக்கவில்லை.

இந்த விவகாரத்தில் வினியோகஸ்தர்களுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார் ,டி.ராஜேந்தர். 20 க்கும் மேற்பட்ட சங்கங்களை உள்ளடக்கிய பெப்சியில்(தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்) இவர் உறுப்பினர்.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், கவிஞர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்ட டி.ராஜேந்தர். விநியோஸ்தரும் ஆவார்.

சென்னை-காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்க தலைவராக அண்மையில் தேர்வு செய்யப்பட்ட ராஜேந்தர், திடீரென வினியோகஸ்தர்களின் ஆபத்பாந்தவனாகத் தன்னை காட்டிக்கொண்டிருக்கிறார்.

‘’கோரிக்கை மனு கொடுக்க சென்ற வினியோகஸ்தர்கள் மீது முருகதாஸ் கொலை முயற்சி புகார் கொடுத்துள்ளது தர்மம் அல்ல’’ என்பது அவரது வாதம்.

‘’முருகதாஸ் தொடர்ந்து படங்களை இயக்க வேண்டும்’’ என அவரை மிரட்டும் தொனியில்  பேசியுள்ள ராஜேந்தர் தானும் ஒரு இயக்குநர் என்பதை மறந்தது துரதிருஷ்டவசமானது.

இந்த பிரச்சினையில் ,பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி , கே.ஆர்.முருகதாஸ் பக்கம் நிற்கிறார்.

‘’ஒரு படத்தின் லாப- நஷ்டங்கள் அதன் தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தரையே சாரும்.உருவாக்கியவரைச் சாராது. தயாரிப்பாளரிடம் கேட்க வேண்டிய கேள்வியை இயக்குநரிடம் கேட்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்’’ என்று சொல்லி உள்ளார்.

ரஜினி விவகாரத்தில் –சினிமா ஆட்கள் இரு கோஷ்டியாகப் பிரிந்து மோதிக்கொண்டிருக்க – விஜய் விவகாரத்தை பா.ஜ.க.வினர் அரசியல் ஆக்குவது – கோடம்பாக்கத்தை ஒன்றிணைத்துள்ளது.

வருமான வரி சோதனைக்கு ஆளான விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் கடந்த 4 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.

ஆனால் இரு நாட்களாக(மட்டும்) அங்கு பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்திவருகிறார்கள்.

அதாவது விஜய் மீதான சோதனைக்குப் பிறகு இந்த போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

‘’பாதுகாக்கப்பட்ட பகுதியில் ஷுட்டிங் நடத்தக்கூடாது’’ என்பது பா.ஜ.க.வினர் வாதம்.

இவர்கள் வாதம்- விதண்டாவாதம் என்பதைப் போட்டு உடைத்துள்ளார், ஆர்.கே.செல்வமணி.

’’என்,எல்.சி.யில் கடந்த 25 ஆண்டுகளில் 16 படங்களின் ஷுட்டிங் நடந்துள்ளது. அப்போது இல்லாத எதிர்ப்பு இப்போது ஏன்?’ என்பது செல்வமணியின் கேள்வி.

’உச்ச நடிகர்களின் படப்பிடிப்பு தமிழகத்தில் நடக்காமல் வேறு இடங்களில் நடப்பதால் இங்குள்ள கலைஞர்களுக்கு வேலை இல்லை. விஜய்  மட்டுமே தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடத்துகிறார்’’ என்று தெரிவித்துள்ள ஆர்.கே.செல்வமணி ,தமிழ் சினிமாவுக்குள் அரசியல் புகுந்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

’5 நாட்களாக ஷுட்டிங் நடக்கிறது .அப்போது எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காமல்  இப்போது ஏன் எதிர்ப்பு என்பதும் அவரது கேள்வி.

பா.ஜ.க.வில் அண்மையில் சேர்ந்த பேரரசுவும் கூட ,இந்த செயலை கண்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

’’யாரையோ திருப்தி படுத்த பா.ஜ.க.வினர் மேற்கொண்ட போராட்டம், இந்த விஷயத்தில் கோடம்பாக்கத்தை ஒன்று படுத்திவிட்டது’’ என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.