100 ரூபாய் கொடுத்தால் தேர்ச்சி பெறலாம்: யோசனை சொன்ன உ.பி. பள்ளி முதல்வர் கைது

லக்னோ: விடைத்தாளுடன் 100 ரூபாய் வைத்தால் நீங்கள் தேர்ச்சி அடைந்து விடுவீர்கள் என்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய உ.பி. பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச இடைநிலைக் கல்வி வாரியமான யுபிஎஸ்இபி தேர்வுகளை  மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் 56 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றுள்ளனர்.

லக்னோவை அடுத்த மவு மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் முதல்வர் பிரவீன் மால் பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுத்து இருக்கிறார். அப்போது அவர் பேசியது சர்ச்சையாகி இப்போது கைது செய்யப்பட்டு உள்ளார்.

அவர் பேசியதாவது: தேர்வு அறையில் உங்களுக்குள் விவாதித்து விடைத்தாள்களை பகிரலாம்.  உங்கள் ஆசிரியர்கள் அனைவரும் எனது நண்பர்கள்.

மாட்டிக் கொண்டு அடி வாங்கினால் பயப்பட வேண்டாம். விடைத்தாளுடன் 100 ரூபாயை மட்டும்  வைத்தால், ஆசிரியர்கள் மதிப்பெண்கள் தந்து விடுவார்கள்.

நீங்கள் தவறாக பதிலளித்தாலும், 4 மதிப்பெண்களுக்கு, பதில் 3 மதிப்பெண் கிடைக்கும் என்றார். அவரின் பேச்சை அப்படியே செல்போனில் பதிவு செய்த மாணவர் சமூகவலைதளத்தில் வெளியிட இப்போது அந்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.