சென்னை:

புதிய தமிழகம் கட்சி தலைவர் அதிமுக பாஜக கூட்டணியில் இணையும் வகையில் அவரது கோரிக்கையை ஏற்று தமிழக அரசு குழு அமைத்து உத்தரவிட்டு உள்ளது. இதன் காரணமாக அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் இணைவது உறுதியாகி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் சேரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை அதிமுகவோ, பாஜகவோ சீண்டவில்லை. இதன் காரணமாக கடுப்படைந்த கிருஷ்ணசாமி,  ‘அதிமுக பாஜக கூட்டணி எங்களை புறக்கணித்தால் அதற்கான விலையை கொடுக்க நேரிடும்” என்றும், திமுக ஆட்சிக்கு வந்தால் தேவேந்திர குல வேளாளர்கள் என்று அரசுப்பட்டியலில் பெயர் மாற்றம் செய்யபடும் என்று ஸ்டாலின் கூறியதையும் வரவேற்று கூறினார்.

இந்த நிலையில், கிருஷ்ணசாமியின் கோரிக்கையான,தேவேந்திர குல வேளாளர் இனத்தவரை, பட்டியல் இனத்தில் இருந்து மாற்றி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்ப்பது தொடர்பாகவும், பட்டியல் இனத்திலுள்ள ஆறு பிரிவுகளை ஒருங்கிணைப்பது குறித்தும்  ஆராய தமிழக அரசு குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி, குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திரகுலத்தான், பள்ளன் ஆகிய ஆறு பிரிவுகளையும் ஒருங்கிணைக்கக் வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து தற்போது பெயர் மாற்றம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன் காரணமாக புதிய தமிழகம் அதிமுக பாஜக கூட்டணியில் இணைவது உறுதியாகி உள்ளது.