திண்டுக்கல்:

புதிய தமிழக கட்சி சார்பில் ஸ்டாலின் மற்றும் பாலபாரதி உருவ பொம்மை எரிக்கப்பட்டதால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.

நீட் தேர்வு குழப்படிகளை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்திய மாணவி அனிதா, தனக்கு நீதி கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை விலக்கக்கோரியும் பெரும்பாலான கட்சிகள், அமைப்புகள், அமைப்பு சாராத மாணவர் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே, நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், “மாணவி அனிதாவுக்கு மருத்துவம் படிக்க தகுதி இல்லை. வேறு துறையில் படிக்க வேண்டியதுதானே” என்று் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேசினார்.

இந்த நிலையில், சி.பி.எம். கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, “மதிப்பெண் குறைவாக பெற்ற தனது மகளுக்காக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் கெஞ்சிக் கேட்டு மருத்துவ சீட் பெற்றவர் கிருஷ்ணசாமி. இதை அதிமுக அமைச்சராக இருந்த ஓ.பி.எஸ்ஸே சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டினார். உடனே கிருஷ்ணசாமி, “அந்த நன்றியை மறக்க மாட்டேன்” என்று சபையில் இருந்த ஜெயலலிதாவை பார்த்து கும்பிட்டார். ஜெயலலிதா, முகத்தைத் திருப்பிக்கொண்டார்” என்று பாலபராதி தெரிவித்தார்.

இது குறித்து கிருஷ்ணசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, பதில் அளிக்காமல் நழுவினார்.

இதற்கிடையே, “மாணவி அனிதாவை தற்கொலைக்குத் தூண்டியது திமுக பிரமுகர்கள்தான். குறிப்பாக குன்னம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சிவசங்கர்தான்” என்றும் கிருஷ்ணசாமி அதிரடியாக புகார் தெரிவித்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், “கிருஷ்ணசாமி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

இதையடுத்து இன்று,  கிருஷ்ணசாமி நிபந்தனையற்ற மன்னிப்பு  கேட்க வேண்டும் என்று அவருக்கு திமுக பிரமுகர் சிவசங்கர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த நிலைியல் சற்று நேரத்துக்கு முன்பு, திண்டுக்கல்லில் மு.க. ஸ்டாலின் மற்றும் பாலபாரதி ஆகியோரின் உருவ பொம்மைகளை நடு ரோட்டில் புதிய தமிழகம் கட்சியினர் எரித்தனர்.  இந்த இருவரையும்  கடுமையான வார்த்தைகளால் திட்டியபடியே, உருவ பொம்மைகளை கால்கலால் உதைத்தனர்.

புதிய தமிழகம் கட்சியினரின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.