சென்னை:

மிழகத்தில் 21ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள  நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்து உள்ளார். இதன் காரணமாக, அதிமுக கூட்டணியில் இருந்து புதிய தமிழகம் கட்சி விலகியுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்  அக்டோபர் 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்த  இடைத்தேர்தலில்அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் இடையே போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில், அதிமுக கூட்டணி கட்சியான புதிய தமிழகத்திடம், அதிமுக தரப்பில் ஆதரவு கோரப்பட்டு வந்த நிலையில், புதிய தமிழகம் உறுதி கூறாமல் இழுத்தடிந்த வந்தது. இந்த நிலையில், இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி, இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு கிடையாது என்று அதிரடியாக அறிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், லோக்சபா தேர்தலின்போது, அதிமுக கூட்டணியில் சேர சில கோரிக்கைகளை முனவைத்தோம். ஆனால், அ.தி.மு.க. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. அதிமுகவை நம்பிய எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், நடைபெற உள்ள   நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கிடையாது என கூறினார்.

கிருஷ்ணசாமியின் அதிரடி அறிவிப்பு காரணமாக, அதிமுக கூட்டணியில் இருந்து புதிய தமிழகம் கட்சி பிரிந்து விட்டது உறுதியாகி உள்ளது.